நாடிகள் (Nadis / Meridians)

ஒரு சக்கரத்தில் இருந்து மற்றொரு சக்கரதிற்கோ அல்லது உடல் முழுவதுக்கோ பிராண சக்தி செல்ல உதவும் சூட்சும சக்தி பாதைகளே நாடிகள் எனப்படும். ஒரு வலைபின்னல் போல ஆராவில் உள்ள நாடிகள் சக்கரங்கள் மூலமாக உடலுடன் தொடர்பு கொள்கிறது.

நாடிகள் தடையின்றி பிராண சக்தியை உடல் முழுவதும் பாயச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம், நாடிகளில் அடைப்பு ஏற்பட்டு சக்தி தேக்கம் ஏற்பட்டால், உடலில் வலி, நோய் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

பழங்கால இந்திய நூல்களில் உடலில் மொத்தம் 72000 நாடிகளில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் மிகவும் முக்கியமான மூன்று நாடிகள் இடகலை, பிங்கலை மற்றும் சுஷுமுனா ஆகும்.

முதுகுதண்டிற்கு இடதுபுறம் இடகலை நாடியும், வலது புறம் பிங்கலை நாடியும் உள்ளது. சுஷுமுனா நாடி நடுவில் முதுகுத்தண்டின் மேலேயே செல்கிறது. இடகலை, பிங்கலை நாடிகள் கீழிருந்து மேலாகச் செல்கிறது என்றும், ஒன்றை மற்றொன்று பின்னியவாறு இருக்கிறது என்றும் பழைய பாரம்பரிய இந்திய மருத்துவத்திலும் மற்ற பிற தத்துவங்களிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பாரம்பரிய புத்த தத்துவங்கள் சுஷுமுனா நாடி முதுதண்டிலும், இடைகலை-பிங்கலை நாடிகள் நேர்கோட்டில் சுஷுமுனைக்கு இணையாக முதுகுத்தண்டின் இரு புறத்திலும் செல்வதாக கூறுகிறது.

நாடிகளை, சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவத்தில் காணப்படும் “சக்தி ஓட்டப் பாதைகளுடன்” (மெரிடியன்) ஒப்பிடலாம். சக்தி ஓட்டப் பாதைகள் வழியாக சீ பாய்கிறது. இடகலை பிங்கலை நாடிகளை – தானியங்கி நரம்பு மண்டலத்தின் இரு பிரிவுகளான பரிவு நரம்பு மண்டலம் மற்றும் துணைப் பரிவு நரம்பு மண்டலம் ஆகியவற்றிற்கு இணையாக கூறலாம். இருதயம், வயிறு மற்றும் குடல்கள் சீராக இயங்க இந்த தானியங்கி நரம்பு மண்டலமே காரணம் ஆகும். தசைகள் மற்றும் சுரப்பிகளை கட்டுப்படுத்துவதும் இந்த தானியங்கி நரம்பு மண்டலமே.  ஆகவே நாடிகளை சுத்தப் படுத்தினால் “தானியங்கி நரம்பு மண்டலம்’ நன்றாக இயங்கி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.