பிரம்பனன் (Prambanan)

கண்டி பிரம்பனன்  என்பது இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்காக ஒரே மதிலினுள் கட்டப்பட்ட ஹிந்து கோவில்களின் தொகுப்பு கட்டிடங்கள் (complex) ஆகும். இது ஜாவாவின் பெரிய ஹிந்து கோவிலாகும். முதலில் மொத்தம் 24௦ கோவில்கள் பிரம்பனனில் இருந்தன.


பல கோவில்களுடன் கூடிய இந்த தொகுப்பு கட்டிடம் மூன்று பாகங்களை கொண்டுள்ளது. முதலில் வெளி பாகம், இரண்டாவது மத்திய பாகத்தில் நூற்றுக்கணக்கான சிறிய கோவில்கள் உள்ளன, மூன்றாவதும் மிகவும் புனிதமானதுமான உட்பாகத்தில் எட்டு பெரிய கோவில்களும், எட்டு சிறிய கோவில்களும் உள்ளன.
மத்திய பகுதி மற்றும் உள் பகுதிதான் மிகவும் புனிதமானது. அதில் எட்டு முக்கிய வழிபடும் இடங்கள் அல்லது கண்டிகள் உள்ளது. மூன்று கண்டிகள் மூன்று முக்கிய கடவுள்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது.
சிவனின் ஆலயம் ஐந்து பகுதிகளுடன் உள்ளது.நடுவில் ஒரு பகுதியும், நான்கு திசைகளில் நான்கு பகுதிகளும் கொண்ட இது மிகவும் பெரியது. 47 மீட்டர் உயரமும், 34 மீட்டர் அகலமும் உடையது. மூன்று மீட்டர் உயர சிவன் சிலை கொண்ட கிழக்கு பகுதி, மத்திய பகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. மற்ற மூன்று பகுதிகளிலும் துர்க்கை, ரிஷி அகஸ்தியர் மற்றும் கணேசன் ஆகியோரின் சிலை உள்ளது. பிரம்மா கோவிலில் பிரம்மாவின் சிலையும், விஷ்ணு கோவிலில் விஷ்ணுவின் சிலையும் உள்ளது. இவ்விரண்டு கோவிலும் 33 மீட்டர் உயரமும், 2௦ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
அனைத்து கோவில்களும் மஹாமேரு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்து மக்கள் தியானம் செய்யலாம்.