போரோபுதூர்(Borobudur)

போரோபுதூர் ஒன்பதாம் நூற்றாண்டில் மஹாயான புத்தரின் ஞாபகச்சின்னமாக  இந்தோனேசியாவில் உள்ள மத்திய ஜாவாவில் கட்டப்பட்டது. இந்த புரதான சின்னத்தில் மொத்தம் ஆறு சதுர வடிவ மேடைகளும், மூன்று வட்ட வடிவ மேடைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கட்டப்பட்டுள்ளது. அம்மேடைகள் 2672 துயர் போக்கும் சட்டங்கள் மற்றும் 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மேடைகளுக்கும் மேலே உள்ள மணி வடிவ நடு மண்டபத்தைச் சுற்றி 72 புத்தர் சிலைகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் துளைகளுடன் கூடிய மணி வடிவ சிறிய ஸ்துபியினுள்ளே உட்கார்ந்த நிலையில் உள்ளது. உலகின் பெரிய புத்த நினைவு சின்னமான இது உலகின் முக்கிய புத்த சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இங்கு வரும் ஒருவர் முதலில் கிழே உள்ள அடித்தள மேடையில் பயணத்தை துவங்க வேண்டும். பின்பு மேடைகளைச் சுற்றி அமைந்துள்ள பாதையின் வழியாக மேலேயுள்ள மேடைகளுக்கு ஏறிச் செல்ல வேண்டும். படிப்படியாக ஏறி உச்சியில் உள்ள ஸ்தூபியை (மணி வடிவ மண்டபம்) அடையலாம். இது புத்தர்களின் அண்டவெளியியலில் குறிப்பிட்டுள்ள மூன்று நிலைகளை குறிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட கட்டிடமாகும்.
அம்மூன்று நிலைகள் :
காமதாது (ஆசைகளின் உலகம்)
ரூபதாது (வடிவங்களின் உலகம்) மற்றும்
அரூபதாது (அருவங்களின் உலகம்)
படிகளின் வழியாக மேலே ஏறும் பொது, கைப்பிடி கொண்ட நடை பாதையில் அமைக்கப்பட்ட 1460 துயர் போக்கும் சட்டங்களில் உள்ள கதைகளை பார்த்தவாறே  மேலே செல்லலாம். உலகிலேயே போரோபுதூரில் மட்டுமே  புத்தரின் முழுமையானதும் பெரியதாகவும் உள்ள  நிவாரணக் கதைகளை  இருக்கிறது.
504 புத்தர் சிலைகளில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவை தலையில்லாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. 43 சிலைகளை காணவில்லை.
போரோபுதூர் எதற்க்காக யாரால் கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகளோ பதிவுகளோ இல்லை. மறைக்கப்பட்ட தரை தளத்தில் உள்ள செதுக்கப்பட்ட  சட்டங்களை ஒப்பிட்டு பார்த்தும், கல்வெட்டினை பார்த்தும் இது எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டியதாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கட்டி முடிக்க 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றும் கட்டி முடித்த ஆண்டு தோராயமாக 825 AD என்று கண்டறிந்துள்ளனர்.
போரோபுதூர் பல நூற்றாண்டுகளாக எரிமலை சாம்பலில் புதையுண்டும், அடர்ந்த காடுகளில் மறைந்தும் இருந்தது. இது வனாந்திரமாக மாற என்ன காரணம் எனபது இன்னும் மர்மமாகவே  இருக்கிறது.
சதுரமாக உள்ள அஸ்திவார மேடையானது தோராயமாக ஒவ்வொரு பக்கமும் 118 மீட்டர் (387 அடி) நீளம் உள்ளது. மொத்தம் உள்ள ஒன்பது மேடைகளில் கிழே உள்ள ஆறும் சதுரமாகவும், மேலே உள்ள மூன்றும் வட்ட வடிவிலும் உள்ளது. அனைத்திற்கும் மேலே உள்ள மேடையில் ஒரு பெரிய மணி வடிவ மண்டபமும் (ஸ்தூபி) அவற்றைச் சுற்றி 72  சிறிய ஸ்தூபிகளும் உள்ளன.  ஒவ்வொன்றும் மணி வடிவத்திலும் நூண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த துளைகளுடன் உள்ளது. ஒவ்வொன்றிலும் உட்கார்ந்த நிலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது.
இந்த புராதன சின்னத்தின் மூன்று பகுதியும் புத்த அண்டவெளி இயலின் உள்ள காமதாது, ரூபதாது மற்றும் அரூபதாது ஆகிய மூன்று இராஜியங்களைக் குறிக்கிறது.
அடியில் உள்ள அஸ்திவார சதுர மேடை காமதாது உலகின் அடையாளம். அடுத்துள்ள ஐந்து சதுர மேடைகள் ரூபதாது உலகின் அடையாளம். மேலுள்ள மூன்று வட்ட மேடைகள் அரூபதாது உலகை குறிக்கிறது.
சாதாரண உணர்ச்சிவயப்பட்ட உயிர்கள் கீழ் உலகமான ஆசைகளின் இராஜியத்தில் வாழ்கின்றன.
தொடர்ந்த இருப்பிற்கான ஆசைகளை எரித்தவர்கள், வடிவங்களின் இராஜியத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் வடிவங்களை பார்த்தாலும் அவற்றால் கவரப்படுவதில்லை.
இறுதியாக முழு புத்தர்கள் வடிவங்களைத் தாண்டி உண்மையை அதன் தூய்மையான நிலையில் அனுபவித்து, முற்றிலும் நிர்வாண நிலை அல்லது இருப்பில்லாத சுயத்தை அடைந்து விடுகிறார்கள். அவர்கள் மேலே உள்ள அரூபதாது இராஜியத்தை அடைகிறார்கள்.
    
 கர்ம சட்டதிட்டம் (கர்மவிபங்கா)
1885 ஆம் ஆண்டு அஸ்திவார மேடையின் அடியில் மறைக்கப்பட்ட ஒரு கட்டிடப் பகுதியை தற்செயலாக கண்டுபிடித்தனர். அதில் மொத்தம் 160 சட்டங்களில் காமதாது இராஜியத்தை பற்றிய கதை காட்சிகள் செதுக்கப்பட்டிருந்தன.
160 சட்டமும் தொடர் கதையாக இல்லாமல், ஒவ்வொரு சட்டமும் ஒரு முழுமையான “செயல் மற்றும் வினைப்பயனை” விளக்கும் வகையில் உள்ளது. கேடு விளைவிக்கும் நடத்தைகளான புரங்கூறுதல் முதல் கொலை வரை செயல்களும் அவற்றின் வினைப்பயனாக கிடைக்கும் தண்டனைகளும் செதுக்கப்பட்டுள்ளது. நல்ல விளைவை  அளிக்கும் மேம்பட்ட நடத்தைகளான தான தருமம் செய்வது முதல் ஆலயத்திற்கு செல்லும் புனித பயணம் வரை நற்செயல்களும் அவற்றின் வினைபையனாக தகுந்த பரிசுகளும்  செதுக்கப்பட்டுள்ளது.
முதல் பார்வைக்கு, அனைத்து புத்தர் சிலைகளும் ஒரே மாதிரி காட்சி அளித்தாலும் அவர்களின் கை விரல்களின் முத்திரைகள் மற்றும் கைகளை வைத்திருக்கும் அமைப்பிலும் சூட்சுமமான வித்தியாசம் உள்ளது. மொத்தம் ஐந்து (வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் ஆகாயம்) திசைகளுக்கு ஐந்து வகை முத்திரைகள் உள்ளது. ஐந்து குழுக்களாக புத்தர் சிலைகளும் ஐந்து வித முத்திரைகளை பிடித்த வண்ணம் இருக்கிறார்கள்.
அக்சோபயா புத்தர் – பூமிஸ்பர்ச முத்திரை – பூமியை சாட்சிக்கு அழைத்தல்.
ரத்னசம்பவா புத்தர் – வர முத்திரை – இரக்கம், தானம் செய்தல்.
அமிதபா புத்தர் – தியான முத்திரை – கூரிய சிந்தனை, தியானம்.
அமோகசித்தி புத்தர் – அபய முத்திரை – தைரியம், காத்தல்.
வைரோச்சனா புத்தர் – வித்தார்க் முத்திரை – விவேகம், நல்லொழுக்கம்.
வைரோச்சனா புத்தர் – தர்மசக்கர முத்திரை – தர்ம சக்கரத்தை சுழற்றி தர்மத்தை நிலை நாட்டுதல்.